மணிப்பூரை காட்டிலும் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக உள்ளதாக, மணிப்பூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் மணிப்பூர்
சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
அந்த அமைப்பின் தேசிய செயலாளர் ச.பாலமுருகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குக்கி இன மக்களும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் 200 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன்
பங்கு பெற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லாமிந்தாங் ஹக்கிம் , தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட 15 க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட வேண்டும், பாலியல்
துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியபடி மணிப்பூர்
மக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேட்டியளித்த மணிப்பூர் மாநிலத்தை
சேர்ந்த சமூக ஆர்வலர் லாமிந்தாங் ஹக்கிம், “ மணிப்பூர் கலவரத்திற்கு குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கு நன்றி எனவும், போராட்டம் நடத்துவதற்கு நன்றி “ எனவும் தெரிவித்தார்.
மேலும் பாஜகவை சேர்ந்த மாநில முதல்வர் மற்றும் பிரதமருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். இவர்கள் நினைத்தால் கலவரத்தை தடுத்திருக்கலாம், ஆனால் குக்கி இன மக்கள் இம்பால் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர், ஏனெனில் மெய்தி இன மக்கள் அங்கு அதிகளவில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இம்பாலில் படுகொலை, பொது வெளியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர் எனவும், தங்கள் அரசியலமைப்பு சட்ட உரிமை மறுக்கப்பட்டு உள்ளது எனவும் ,அங்கு புகார்களுக்கு காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் லாமிங்தாங் ஹக்கிம் குற்றம்
சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த மணிப்பூர் மாநிலத்தை சார்ந்த டயானா “ மணிப்பூரில் மெய்தி இனத்தினருடன் இணைந்து இருக்க முடியாது என்பதால் குக்கி
மக்கள் தனியாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த நபர்களை சட்டரீதியாக தண்டிக்க
வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் மணிப்பூரில் அமைதி வேண்டும், அந்த மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை எனவும், அங்கு பாதுகாப்பு இல்லை என்பதால் இங்கே உறவினர்கள் சிலர் வந்திருப்பதாகவும், மணிப்பூர் காட்டிலும் தமிழகமே பாதுகாப்பான மாநிலமாக உள்ளது எனவும் குக்கி இன மக்கள் தெரிவித்தனர்.







