கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 6 குடியரசுத் தலைவர்கள் படித்துள்ளனர் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். சென்னை பல்கலைகழகத்தில் பயின்ற 762 பேர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பட்டம் பெற்றனர். மேலும் சென்னை பல்கலை. இணைப்பு கல்லூரிகளில் பயின்ற 89,934 மாணவர்களும், தொலைதூரக் கல்வியில் பயின்ற 12,166 பேர் உட்பட மொத்தம் 1,04,416 பேர் இந்தாண்டு பட்டம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியதாவது, ”பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுக்காட்டாக விளங்குகிறது. பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதால் நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம். கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 6 குடியரசுத் தலைவர்கள் படித்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல்கலாம் ஆகியோர் இந்த பல்கலை.யில் படித்துள்ளனர். சர் சி.வி.ராமன், சந்திரசேகர் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் சென்னை பல்கலை.யில் படித்தவர்கள். திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழிநடத்துகிறது. மாணவர்கள் மிக உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாகக் கூடாது.” இவ்வாறு தெரிவித்தார்.







