கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்துக்கு தமிழ்நாடு அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. மலைப் பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஆறு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சிம்லா, குலு, மணாலி, மண்டி உள்ளிட்ட 13 பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஒன்பது இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள், வீடுகள், உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் பாலங்கள் ஆற்றில் மூழ்கியுள்ளன. மண்டி மாவட்டத்தில் பீஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆத் – பஞ்சரை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.








