ஆதாரத்தை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…! விளக்கம் அளிக்குமா ஆளுநர் மாளிகை?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை விசாரிப்பது தொடர்பான கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை நகலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் மீதுள்ள ஊழல்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை விசாரிப்பது தொடர்பான கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை நகலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது.

அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, ஒரு சில வழக்குகளுக்கு சட்ட விளக்கம் கேட்டு இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான கோப்புகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என விளக்கமளித்தது.

இந்நிலையில் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை வெளிட்டுள்ளது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி ஆளுநரின் செயலாளர், கடிதத்தை பெற்றுக்கொண்டு ஒப்புகை அளித்த விவரம், அத்துடன் கடந்த 2022 செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு  அனுப்பப்பட்ட கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

“கோப்புகளை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு அறிக்கை ஏதும் கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல” என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.