”விஜயகுமார் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்” என கோவையில் ஏடிஜிபி அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கபப்ட்டுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அதே போல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர் தெரிவித்ததாவது..
” 2009 ம் ஆண்டு விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரியாக சேர்வதற்கு முன்பு, குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பியாக 6 வருடம் பணிபுரிந்துள்ளார். அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரி அவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் சிறப்பாக பெயர் வாங்கியுள்ளார்.
அவர் இறந்ததற்கான காரணத்தை விசாரித்த பொழுது முதல்கட்டமாக கடந்த சில வருடங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது மருத்துவர் அந்த தகவலை தெரிவித்தார்.
மன அழுத்தம் காரணமாகவே கடந்த சில தினங்களாக மனைவியும், மகளும் கோவையில் அவருடன் இருந்திருக்கின்றனர். இதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு
காவல்துறையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ காரணத்தால் அவர் உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் என்பது வேறு , மன அழுத்தம் என்பது வேறு. பணி சுமை , குடும்பம் இரண்டுமே அவரது மன அழுத்தத்துக்கு காரணம் இல்லை.
இது ஒரு மருத்துவ காரணமாகத்தான் தெரிகிறது. காவல்துறை பணி மட்டும் இறுக்கமானது அல்ல, மருத்துவ பணியும் கூட இறுக்கமானது. இரண்டு வருடமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சிகிச்சை பெற்று வருவது குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு பின்னரே தெரியவந்துள்ளது.
அவரது பிரச்னை குறித்து காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை. மேற்கு மண்டல ஐஜி, கோவை மாநகர காவல் ஆணையர் அனைவரும் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். மருத்துவரிடம் பேசும்போது ஓசிடி கம் டிப்ரஷன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பல மருந்துகள் கொடுத்துள்ளார்.
அவருக்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என ஏடிஜிபி அருண் தெரிவித்தார்.







