பட்ஜெட் 2022-23: ‘மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது’ – இபிஎஸ் குற்றச்சாட்டு

2022-2023-ஆம் நிதிஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று…

2022-2023-ஆம் நிதிஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை சபையில் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அதிமுக-வினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுவதாகவும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகவும் கூறி அதிமுக-வினர் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, அதிமுகவினர் பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது எனக் கூறினார். இதையடுத்து அதிமுக-வினர் அனைவரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியை விட்டுச் செல்லும் போது 4.8 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமை இருந்ததாக தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த உடன் 1.08 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும், 2023 வரை இரண்டு ஆண்டுகளுக்கு 2.28 லட்சம் கோடி ரூபாய் கடனை திமுக அரசு வாங்கியுள்ளதாகவும் கூறினார். இதில் முக்கிய திட்டங்கள் எதுவும் இல்லை என விமர்சித்த அவர் திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, கல்விக்கடன் தள்ளுபடி என எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, இந்தப் பட்ஜெட்டால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக தெரிவித்தார். பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய அறிவிப்பு இல்லை எனவும் அகவிலைப்படி உயர்வு பற்றிய தகவல் இல்லை எனவும் கூறினார். நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்ததாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு இதுவரை என்ன செய்தது என கேள்வி எழுப்பினார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர், அது ஜனநாயகப் படுகொலை என சாடினார். கொரோனா தொற்றுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வருவாய் வழிகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையிலும் கடன் குறையவில்லை எனக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அரசு சரியாக செயல்படவில்லை என்றும் விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.