கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நேரில் ஆஜராக வெளியுறவு அமைச்சகம் சம்மன் வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஆஜரான கேமரூனை இந்தியாவைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்தது. கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், “கனடாவில் வளர்ந்து வரும் இந்திய-விரோத நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வெறுப்புக் குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்திய குடிமக்களும், பயணம் மேற்கொள்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரானவர்களை எதிர்க்கும் இந்திய சமூகத்தினர் குறி வைக்கப்பட்டு, அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த கனடாவில் உள்ள பகுதிகள் மற்றும் சாத்தியமான இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்தியப் பிரஜைகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பர். கனடாவில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதால், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், ஒட்டாவா, டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகம், துணைத் தூதரகத்தில் அந்தந்த தூதரகத்தில் இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் அல்லது madad.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது, கனடா வாழ் இந்தியர்களுக்கு ஏதேனும் அவசர உதவி அல்லது விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இது உதவும்” என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







