இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி என்கிறார் கவிஞர் வாலி. நல்ல சொற்களை பேசினால் நலம் கிடைக்கும் என்பதை குறிக்கும் வகையில் நடந்த சில நிகழ்வுகளை வாருங்கள் பார்க்கலாம்.
1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. ஆனால் இதற்கு முன்பே கவிஞர் வாலி எழுதிய பாடல், நினைத்தேன் வந்தாய் நூறு வயது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த எம்ஜிஆர், சிகிச்சைக்குப் பின் கலந்து கொண்ட படப்பிடிப்பு காவல்காரன் திரைப்படம். அந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் நினைத்தேன் வந்தாய் பாடல் படப்பிடிப்பு என்கிறார் வாலி. இப்பதான் நினைத்தேன். வந்துவிட்டாய் ஆயுசு நூறு என்பார்கள் என்பதைப் போல பாடல் காட்சி அமைந்தது.
சிவாஜி நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் “வெள்ளிக்கிண்ணம்தான் தங்கக் கைகளில்’. இந்தப்பாடலுக்கு முதலில், வெள்ளித்தட்டுத்தான் தங்கக் கைகளில் என வரிகள் எழுதியிருந்தார் வாலி. ஆனால் திரைப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் மெய்யப்ப செட்டியார், வாலியை அழைத்து, வெள்ளி என்றால் பணம், தட்டு என்றால் தட்டுப்பாடு… எனவே பணம் தட்டுப்பாடு என குறிக்கும் வகையில் வரிகள் வேணுமா எனக்கேட்க, வெள்ளித்தட்டு, வெள்ளிக் கிண்ணமாக மாறியதாக கூறுகிறார் கவிஞர் வாலி..
தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படம் வால்மீகி. இந்தப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் மன்னன் முன்பு அழைத்து வரப்பட்ட பாகவதரிடம் நீ யார் என மன்னன் கேட்க, நான் கைதி என பாகவதர் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. அன்று மாலை, லக்ஷ்மி காந்தன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர் என பேட்டி ஒன்றில் கூறுகிறார் கவிஞர் வாலி.
இதேபோல், எம்ஜிஆர் நடித்த தலைவன் திரைப்படத்தில், நீராழி மண்டபத்தில் என்ற பாடலில், தலைவன் வாராமல் காத்திருந்தாள் என வரிகள் வர. திரைப்படமும் வெளியாக தாமதமானதாக குறிப்பிடுகிறார் வாலி. இந்தப்பாடலில் எம்ஜிஆருக்காக குரல் கொடுத்திருந்தார் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்த தமிழ் மொழி வாயிலாக நல்ல சொற்களை பேச வேண்டும். நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.







