ஆப்கனிஸ்தானில் விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள தாலிபான் ஆட்சியாளர்கள், இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆப்கனிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அதன்பிறகு அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. துருக்கி மற்றும் கத்தார் நிறுவனங்களுடன் டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, தலைநகர் காபூலில் மட்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.
எனினும், ஆப்கனிஸ்தானின் பல்க், ஹெராட், கந்தஹார், கோஷ்ட் ஆகிய மாகாணங்களில் விமான சேவை தொடங்கப்படவில்லை.
இங்கும் விமான சேவையை தொடங்குவது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்களுடன் ஆப்கனிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த மாகாணங்களில் விமான சேவையை அளிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் GAAC நிறுவனம் முன்வந்ததை அடுத்து, அந்நிறுவனத்துடன் ஆப்கன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆப்கனின் முதல் துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து பேசிய முல்லா அப்துல் கனி பராதர், ஆப்கனிஸ்தானில் பாதுகாப்பு வலுவாக இருப்பதாகவும், எனவே ஆப்கனில் முதலீடுகளை மேற்கொள்ள இஸ்லாமிய நாடுகள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை அடுத்து, அனைத்து நாடுகளைச் சேர்ந்த விமானங்களும் ஆப்கனுக்கு பாதுகாப்பாக வந்து செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.









