நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடலான ’ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே’ என்ற பாடல் வரிகளுக்கு புது ரூட்டில் பதில் அளித்தார் கமல்.
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என எண்ணியவுடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் தொகுப்பாளராக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். அதில் வாரம் ஒரு பிரச்சனையை பேசி, தமிழக இளைஞர்களை தமது மக்கள் நீதி மய்யம் கட்சி பக்கம் இழுத்தார். இது டீக்கடைகளில் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கோவை தெற்கு தொகுதியில் அவரே வேட்பாளராக களமிறங்கினார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்றார். அதன் பின்னர் அவரது கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பலர் அவரது கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்தனர். இதனால் கமலின் மக்கள் நீதி மய்யம் கரைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்தநிலையில் தமது அரசியல் நிலைப்பாட்டை தூக்கி நிறுத்தும் வகையில் அவர் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் படத்தில் அவரே பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் உள்ள ஹயாத் ஹோட்டல் நடிகர் கமல்ஹாசனின் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பாஜகவினர் கமல் எழுதி பாடியுள்ள ’ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே’ என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரே என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், தமிழில் நல்ல வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. பத்திரிக்கையாளர்கள் சேர்ந்து இருக்கிறீர்கள். இதுவும் ஒரு ஒன்றியம்தான். டைரக்டர்ஸ் எல்லோரும் சேர்ந்து யூனியன் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு ஒன்றியம்தான். அதேபோல், புரோடிசர்ஸ் சேர்ந்து யூனியன் வைத்திருக்கிறார்கள். அதுவும் ஒரு ஒன்றியம்தான். இங்கெல்லாம் தவறு நடந்தால் எப்படி இருக்குமோ,அதுபோல்தான் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன என தனக்கே உரிய பாணியில் பதில் கூறினார் கமல். இதனைக்கேட்டு அங்கிருந்தவர்கள் வாயடைத்து போயினர்.
அதையடுத்து திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியன்று விக்ரம் திரைப்படத்தினை வெளியீடுகிறீர்களே ? ஏதாவது சிறப்பு காரணங்கள் உள்ளனவா ? என கேட்டதற்கு, கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த தலைவர். அவரை சந்திக்கும்போதெல்லாம் அவர் எனக்கு நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குவார். அந்த புத்தகங்களில் உள்ள கருத்துகள் திரைப்படத்தில் வந்தால் நன்றாக இருக்கும் என ஒரு ஆசான்போல் அறிவுரை கூறுவார். அவ்வளவுதான், அவரது பிறந்தநாள் அன்று இத்திரைப்படத்தினை வெளியிடுவதற்கு காரணங்கள் இல்லை. அதற்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனக் கூறினார். இப்படி மத்திய, மாநில அரசுகளை பகைக்காமல் பதில் கூறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதுவே தற்போதைய அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக உள்ளது.








