டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி, 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 49 ரன்கள் அடித்தார். நெதர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணி இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.







