இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின் உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.
இன்று 2வது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரிஷாப் பண்ட் ,இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இஷான் கிஷான் அதிரடியாகி விளையாடினார்.மறுபுறம் பண்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் இஷான் கிஷான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களில் வெளியேறினார்.
அடுத்தாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்தார்.
பின்னர் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய டிம் சவுதி, பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் என தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் வீழ்த்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து 192 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.







