ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் பிணையில் விடுவிப்பு

கோவையில் ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.…

கோவையில் ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை பீளமேடு காவல் நிலைய சிக்னலின் அருகே சென்று கொண்டிருந்தபோது தனியார் பள்ளி வாகனம் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதையடுத்து, அந்தப் பள்ளி வாகனத்தை நிறுத்தி மோகனசுந்தரம் தட்டி கேட்டுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த சிங்காநல்லூர் போக்குவரத்துக் காவலர் சதீஷ், பள்ளி வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் மோகனசுந்தரத்தைத் தாக்கியுள்ளார். இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, பள்ளி வாகனம் செய்த தவறை தட்டிக் கேட்டதற்கு என் மீது காவலர் தாக்குதல் நடத்தியது நியாயமற்ற செயல். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகனசுந்தரம் மாநகர் காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். காவலர் ஸ்விக்கி ஊழியரைத் தாக்கும் வீடியோ வைரலான நிலையில், காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், அவதூறாகப் பேசுவது மற்றும் தெரிந்தே காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காவலர் சதீஷ் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், காவல் நிலைய பிணையில் சதீஷ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.