’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை நடிகர் சூர்யா வரவேற்றுள்ளார். நாட்டு மக்களிடையே இன்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகத்…

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை நடிகர் சூர்யா வரவேற்றுள்ளார்.

நாட்டு மக்களிடையே இன்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகத் திடீரென அறிவித்தார். வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை என்றும் தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடிய வில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அந்தச் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்கள் தவறு என்ற அவர், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில்மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

இதையடுத்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் இதைக் கொண்டாடிய விவசாயிகள், இந்த சட்டங்களை நாடாளுமன்றம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். உழவே தலை என்ற தலைப்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.