“பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ஓம்பிர்லா அவர்களை மக்களவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த தீர்மானத்தை முகமது ஜாவேத், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் மல்லு ரவி உள்ளிட்ட எம்.பி.க்கள் முன்வைத்துள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்:

• எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவது
• எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண்கள் எம்.பி.க்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
• பொதுமக்களின் பிரச்சினைகளை எழுப்பியதற்காக எதிர்க்கட்சியினரை முழு அமர்வுக்கும் இடைநீக்கம் செய்தல்
• முன்னாள் பிரதமர்களை பற்றி கூறப்பட்ட அவமதிப்பான கருத்துகளுக்கு நடவடிக்கை இல்லாதது
• சபாநாயகர் பதவிக்கு அவசியமான நடுநிலைத்தன்மை குறித்து எழும் கவலைகள்

இவை வெறும் அரசியல் கருத்து வேறுபாடுகள் அல்ல – பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மையையும் மரியாதையையும் நேரடியாக தொடும் விஷயங்கள்.

இந்திய பாராளுமன்ற வரலாற்றில், இப்படிப்பட்ட தீர்மானங்கள் பொறுப்புணர்வை உறுதி செய்யும் ஜனநாயக கருவிகளாக இருந்து வருகின்றன.
1954ஆம் ஆண்டிலேயே, எதிர்க்கட்சிகளின் பலம் 50 எம்.பி.க்களுக்கும் குறைவாக இருந்தபோதும், அன்றைய லோக்சபா சபாநாயகரான ஜி. வி. மாவலங்கர்-க்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட, சபாநாயகர் நடத்தை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் உரிமை ஜனநாயக மரபாக மதிக்கப்பட்டது.

அதுவே இந்திய ஜனநாயகத்தின் பலம் , ஜனநாயக அமைப்புகள் கட்சி எல்லைகளைத் தாண்டி நடுநிலையாக இருக்க வேண்டும்.

இந்த மார்ச் 9, பாராளுமன்ற வரலாற்றில் மீண்டும் ஒரு முக்கிய நாளாக அமையக்கூடும்.
அன்று, எம்.பி.க்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கை முழு சபைக்கும் சொந்தமானது – அது ஒரு அரசியல் கட்சிக்கானது அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எல்லா எம்.பி.க்களும், பாராளுமன்றத்தின் மரியாதை, நடுநிலைத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை காக்க, இந்த விவாதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.