இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக பொருட்கள் இந்த மாத இறுதிக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்துள்ள பிரச்னைகளால் அங்க அரசியல் நிலைத்தன்மையில்லாத சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து மத்திய அரசிடம் அனுமதியும் கேட்டிருந்தார். மத்திய அரசும் அதற்கான அனுமதியை அளித்துள்ளது.
சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்பிலான 137 உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள குழந்தைகளுக்கான பால்பவுடர் என 123 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
உணவுத்துறை மூலமாக அரிசி கொள்முதலுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பேக்கிங் நடைபெற்று வருகிறது. ஆவின் நிறுவனம் மூலமாக பால் பவுடரும், மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக மருந்துப் பொருட்களும் கொள்முதல் செய்வதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்களிடமிருந்து – அன்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் என்று அச்சிடப்பட்ட பைகளில், மத்திய, மாநில அரசுகளின் முத்திரைகளுடன் பொருள்கள் பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும், சென்னையிலிருந்து பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிகளை கண்காணிக்க அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், ஆவின் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழு இந்த பணிகளை ஒருங்கிணைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








