முக்கியச் செய்திகள் இந்தியா

ஏர் இந்தியா CEO-வாக கேம்ப்பெல் நியமனம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தால் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேம்ப்பெல்லை மகிழ்ச்சியுடன் ஏர் இந்தியாவுக்கு வரவேற்பதாக அதன் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். விமான துறையில் புகழ்பெற்றவரான கேம்ப்பெல், அதன் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் விமான சேவை நிறுவனத்தை நடத்தி வரும் கேம்ப்பெலின் வருகையால், ஏர் இந்தியா பலன்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சந்திரசேகரன், சர்வதேச தரத்திலான விமான சேவை நிறுவனத்தை வடிவமைப்பதில் அவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

50 வயதாகும் கேம்ப்பெல், கடந்த 26 ஆண்டுகளாக விமானத்துறையில் செயல்பட்டு வருகிறார். 1996ம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த கேம்ப்பெல், அந்நிறுவனத்திற்காக நியூசிலாந்து, கனடா, ஹாங் காங், ஜப்பான் நாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.
கடந்த 2011ம் ஆண்டு சிங்கப்பூர் திரும்பிய கேம்ப்பெல், குறைந்த விலை விமான சேவையை அளிக்கும் ஸ்கூட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். பின்னர் அந்த நிறுவனத்தை 2016ம் ஆண்டு வரை அவர் நிர்வகித்து வந்துள்ளார்.

பின்னர் தான் பணியாற்றிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுனத்திற்குத் திரும்பிய அவர், அதன் துணைத் தலைவராக இருந்துள்ளார். பின்னர் கடந்த 2020ம் ஆண்டு, மீண்டும் ஸ்கூட்டின் தலைமை செயல் அதிகாரியானார்.

ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேம்ப்பெல், இது தனக்கு கிடைத்துள்ள கெளரவம் என குறிப்பிட்டுள்ளார். டாடா நிறுவனத்தின் சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்ற தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகவும் கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

Gayathri Venkatesan

ரங்கா… ரங்கா என்ற முழக்கத்துடன் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா

Ezhilarasan

இனவெறி தாக்குதல்: மைதானத்தை விட்டு வெளியேறிய ஜெர்மனி வீரர்கள்

Gayathri Venkatesan