கட்டுரைகள்

3 ஆண்டுகளாக செயல்படாத சர்க்கரை ஆலை; தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா நிர்வாகம்


ஹேலி கார்த்திக்

கட்டுரையாளர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காமராசர் காலம் தொட்டு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சர்க்கரை ஆலை தற்போது பொலிவிழந்து, கடந்த 3 ஆண்டுகளாக தனது அரவையை நிறுத்தியுள்ளது. ஆலையை மீண்டும் இயக்கக்கோரி ஆலைத் தொழிலாளர்கள் 37வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் தொடர்பாக நம்மிடம் பேசிய ஆலை ஊழியர் ராஜ்குமார், “சர்க்கரை ஆலையின் ஒருநாள் அரவைத் திறன் 2,400 டன் ஆகும். இப்பகுதியிலுள்ள இதர ஆலைகளின் அரவைத் திறன் இதைவிடக் குறைவாகும். ஆனாலும், அவற்றில் அரவை தொடங்கிவிட்டன.

ஆனால், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளாக இயங்கவில்லை. நாங்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரை நேரில் சென்று மனு கொடுத்துவிட்டோம். நிச்சயம் ஆலை இயங்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆலை இன்றுவரை அரவையைத் தொடங்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “எங்களுக்கான ஊதிய நிலுவைத் தொகை கடந்த ஓராண்டாக நீடித்து வருகிறது. ஆகவே எங்கள் கோரிக்கைகளை ஆலை நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் நிறைவேற்ற வேண்டும்.” என்றும் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆலையின் சிறப்பு அதிகாரி மலர்விழியிடம் பேசியபோது, “ஆலைக்கு போதுமான கரும்பு கிடைக்கவில்லை. ஆலையை நட்டத்தில் இயக்க முடியாது. தற்போதைய சூழலில் இந்த ஆலையை இயக்கினால் நிச்சயம் நட்டம்தான். அடுத்த பருவத்தில் ஆலையை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்தார்.

விவசாய சங்கத்தினர் அளித்த மனு

இதனையடுத்து ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ வில்வநாதனை தொடர்பு கொண்டு பேசியபோது, “கரும்பு போதிய இருப்பு இல்லாததால் ஆலையை இயக்க முடியவில்லை என நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது. இனி வரும் காலங்களில் அரவையைத் இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், “ஊதிய நிலுவையில் உள்ள தொழிலாளர்களுக்கு நிலுவையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்றும் கூறியுள்ளார்.

ஆனால், ஆலை நிர்வாகம் இதில் பொய் கூறுவதாக சிஐடியு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆலையில் நிலுவையில் உள்ள 50 டன் கரும்பை இதர ஆலைகளுக்கு வழங்கப்படுவதை தவிர்த்து அரவையைத் தொடங்கினால் வேலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கரும்பை வழங்க முன் வருவார்கள். நாங்களும் விவசாய சங்கங்களும் அதனை பெற்றுத் தர தயாராக இருக்கிறோம் என அமைப்பின் நிர்வாகி சக்திவேல் தெரிவித்துள்ளார்.

ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன்

எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட இப்பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பி்னரின் எதிர்பார்ப்பாகும்.

 

நிருபர்: செந்தில் குமார்
கட்டுரையாளர்: ஹேலி கார்த்திக்

Advertisement:
SHARE

Related posts

அவன்தான் மகா நடிகன்…

Arivazhagan CM

போர்களுக்கு எதிரான ‘நப்ளம்’ சிறுமியின் பிறந்தநாள்!

திரையுலக மரபுகளை தகர்த்த புரட்சிப் படைப்பாளி

Saravana Kumar