அமைச்சர் வருகைக்காக அவசர அவசரமாக திடீரென வெள்ளையடிக்கப்பட்ட வேகத்தடைகள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வராததால், மரக்கன்றுகளுடன் தயார்நிலையிலிருந்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவடத்தில் பொதுப்பணித்துறை, (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் சீர்காழி வழியாகச் சிதம்பரம் செல்லும் வழியில் புத்தூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பராமரிப்பு கீழ் புத்தூர் -புதுப்பட்டினம் -பழையார் இடையே ரூ.1கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளதை ஆய்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பில் அதிகாரிகள் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காகச் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், எருக்கூர், புத்தூர் பகுதி சாலை ஓரங்களில் உள்ள மேடு, பள்ளங்களை இரவு, பகலாக மண்இட்டு சீரமைத்துள்ளனர். மேலும், புத்தூர் பகுதியில் அமைச்சர் வருகையின் சிலமணிநேரத்திற்கு முன்பாக அவசர, அவசரமாக வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள் வரைந்து தயார் நிலையில் காத்திருந்தனர். அத்துடன், அமைச்சர் ஆய்வு செய்ய உள்ள பகுதியில் சாலையோரங்களைச் சரிசெய்து அங்கு மரக்கன்றுகள் அமைச்சரால் நடுவதற்கு ஏற்பாடு செய்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.
அண்மைச் செய்தி: ‘குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு’
ஆனால், அமைச்சர் புத்தூர் பகுதி ஆய்வு உறுதிப்படுத்தப்படாததால் அங்கு நிற்காமல் நேராகச் சிதம்பரம் சென்றுள்ளார். இதனால், ஏமாற்றம் அடைந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடுவதற்கான எடுத்து வந்த மரக்கன்றுகளைத் திரும்பி எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் வரவில்லை என்றாலும், அமைச்சருக்குப் பதிலாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட சாலையின் தரத்தினை தோண்டி பார்த்து ஆய்வு செய்து சென்றுள்ளார்.