குரூப்4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் 18.50 லட்சம் தேர்வர்கள் எழுதினர். எதிர்பார்ப்பை விடக் கடினமாக இருந்த குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை ( கீ ஆன்சர்) நேற்று இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும், அவற்றைத் தேர்வர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் டிஎன்பிஎஸ்சி ( http://www.tnpsc.gov.in) வலைத்தளம் வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னஞ்சல், தபால் வழியாக வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே குருப்-4 தேர்வைப் பொருத்தவரை, நேர்முகத்தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றாலே அரசுப் பணி வாய்ப்பு உறுதியாகும் என்பதால், தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.