தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் திடீர் ஆய்வுகள் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாநகராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.
அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஆவடிக்குச் சென்றபோது அந்த மாநகராட்சிக்கு உள்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்திலும், கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் முதலமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.







