திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று வெட்டிவேர் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 24ம் தேதி காலை
கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வரும் 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை என இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர்.

இந்நிலையில், முக்கிய திருநாளான இன்று (ஆகஸ்ட் 30ம் தேதி ) ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 4.30 மணியளவில் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை சாமி சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரா. அருள்முருகன், இணை ஆணையர் எஸ். ஞானசேகரன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.







