நாங்குநேரில் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
நாங்குநேரி சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மாணவர்களுக்கு அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:
மாணவர்களே இந்த ஆண்டு என்ன ஆண்டு என்று உங்களுக்கு தெரியுமா? வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகளை கடந்த ஆண்டு. இந்த ஆண்டில் மாணவர்களுக்கு வைக்கம் போராட்டம் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். பெரியார் எதெற்கெல்லாம் குரல் கொடுத்தார் என்பதையெல்லாம் எடுத்துரைக்க வேண்டும் என முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் மாணவர்களே உங்களிடம் நான் வைக்கும் ஒரு வேண்டுகோள். மாணவர்களே மிகப்பெரிய ஆளுமைகளெல்லாம் நமக்கு நிறைய புத்துமதிகள் சொல்லியுள்ளனர். மனித நேயம் என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு விதங்களில் நமக்கு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதெல்லாம் புத்திக்கே ஏறாமல் இருந்த மனிதருக்கெல்லாம் எப்ப தெரியுமா புத்திக்கு ஏறுச்சு? கொரோனா என்ற கொடூர நோய் தாக்கிய இரண்டு ஆண்டு தான் நிறைய கற்று கொடுத்தது. அதுதான் எல்லாருக்கும் எல்லாம் என்று முதலமைச்சர் சொல்வதை புரியவைத்தது.
கல்வி சார்ந்து அனைவரும் பாராட்டும் வகையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போது, 2 நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வு அது எங்கு நடந்தது எனக் கூற விரும்பவில்லை. மாணவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான் பள்ளிக்கூடத்திற்கு நீங்கள் போகும் போது உங்களது புத்தியை கூர்மையாக்க நாங்கள் ஆசைபடுகிறோம். உங்களை கூர்நோக்கும் இல்லத்தில் சேர்க்க நாங்கள் ஆசைப்படவில்லை.
ஆனால் நடக்கும் ஒரு சில சம்பவங்கள் எங்களை மிகவும் பாதிப்படைய செய்கிறது. இதனால் ஒரு சில நேரங்களில் நாங்கள் சோர்வடைந்தும் விடுகிறோம். நாங்கள் மாணவர்களை அறிவு சார்ந்து வளர்க்க நினைக்கும் போது, உங்களிடையே வேற்றுமையை விதைக்கும் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது சகோதரி இருவருக்கு பாதுகாப்பான கல்வி வழங்குவேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இது என்னுடைய கடமை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவ மானவிகளும் அனைவரையும் தங்களது சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் பார்க்க வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாம் என்கிற சொல் ஒரு பவர்புல்லான சொல். இதை அடிக்கடி முதலமைச்சர் கூறி வருகிறார். அவர் சொல்வதை அனைவரும் மனதில் வாங்கிக்கொண்டு அனைவரும் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள். படிப்பு மட்டும் தான் முக்கியம் நமக்கு. நாம் நமக்குள்ளாக வேற்றுமை உணர்வை உருவாக்கும் விதமாக எதையும் செய்யாதீர். உங்களுக்காக இன்று பல திட்டங்களை உருவாக்கும் முதலமைச்சரை பெருமைப்படவையுங்கள். மற்ற மாநிலங்கள் நம்மை பார்க்கும் போது, அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையை பார்க்கும் போது பல பெருமைகளை நாம் நிலைநாட்டிக்கொண்டிருக்கிறோம்.
மாணவர்களே மீண்டும் நான் கூறுகின்றேன். ஒரு அமைச்சராக கூறவில்லை. உங்கள் அண்ணனாக கூறுகிறேன். தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் எனது வேண்டுகோள். அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள், இதுதான் புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதிமொழியாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற ஒரு சம்பவர் இனி எங்கும் நடக்காதவாறு நீங்கள் பார்த்துகொள்ள வேண்டும். ஏனென்றால், எல்லாவற்றையும் அரசாங்கம் பார்த்துகொண்டாலும், உங்களை நம்பிதான் நாங்கள் பார்க்கிறோம். மாற்றத்தை உருவாக்க வேண்டிய சக்தி பள்ளி மாணவர்களிடம் தான் உள்ளது.
நீங்கள் எங்களுக்கு மட்டுமல்லாது முதலமைச்சரின் கரங்களையும் வலுப்படுத்துபவர்களா இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியுள்ளார்.
https://twitter.com/Anbil_Mahesh/status/1689995539604242432?t=XazhYMkgCuyIg8wEmQv8uQ&s=08







