நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி பள்ளியில் சாதி ரீதியாக மாணவன் சின்னதுரைக்கு…

நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி பள்ளியில் சாதி ரீதியாக மாணவன் சின்னதுரைக்கு சில மாணவர்கள் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதுகுறித்து ஆசிரியரிடம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து சின்னதுரையையும், அவரது தங்கையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே சாதி வெறி இவ்வளவு தீவிரமாக இருப்பது அனைவரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதிவெறியை களைய வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பில் பெருமளவு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ”நாங்குநேரியில் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட வீடியோவை டேக் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

https://twitter.com/mkstalin/status/1690017715870990336

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம்.

குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.