ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இன்று கலமிறங்கிய சீனா அணியை 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணி அபாரமாக வென்று 5ம் இடத்தை தக்கவைத்தது.
சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியானது 5 மற்றும் 6 ஆகிய இடங்களுக்கான போட்டியாகும்.
இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் 6 ஆவது இடத்தில் உள்ள சீனா அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி 5 ஆவது இடத்திலும், தோல்வியுறும் அணி 6 ஆவது இடத்திலும் தொடரை முடிக்கும்.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் பாகிஸ்தான் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சீனா ஒரு போட்டிகளில் கூட வெற்றியோ அல்லது சமனோ செய்யவில்லை. எனவே இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு 70%, சீனாவுக்கு 30% உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் சீனாவை 6-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 5 ஆம் இடத்தில் தொடரை நிறைவு செய்தது. மேலும் தோல்வியுற்ற சீனா 6 ஆவது இடத்தில் தொடரை நிறைவு செய்தது.







