மாணவர்கள் கல்வியோடு, இலக்கிய திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் கல்வியோடு, இலக்கிய திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் சென்னை இலக்கியத் திருவிழா…

மாணவர்கள் கல்வியோடு, இலக்கிய திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் சென்னை இலக்கியத் திருவிழா 2023 இன் இலக்கியப் போட்டிகள் மட்டும் பயிற்சி பட்டறைகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

சென்னை இலக்கியத் திருவிழா 2023 ஜனவரி 6 முதல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதற்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.


பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் பெரிய புத்தக வாசிப்பாளர் கிடையாது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அத்தனை
பேரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் போட்டியில் கலந்து கொள்ளும்
அனைவரையும் வாழ்த்துகிறேன்.

வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு இலக்கிய திருவிழாக்கள் நடக்கிறதா அதில்
கல்லூரி மாணவர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்களா என்று
தெரியவில்லை. ஆனால் இங்கு திராவிட மாடல் அரசு நடப்பதால் தான் இத்தகைய
விழாக்கள் நடைபெறுகிறது என நினைக்கிறேன் என்ற அவர்,

மொழியின் இலக்கிய செழுமையை, அதன் மரபை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கிய திருவிழாக்கள் நடக்கும் என முதல்வர் அறிவித்து இருந்ததார். அதன்
அடிப்படையில் ஏற்கனவே பொருநை இலக்கியத் திருவிழா நவம்பரில் சிறப்பாக
நடைபெற்றது. இப்போது சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மூன்று
நாட்கள் இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 100 க்கும் மேற்ப்பட்ட
இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பு உரை ஆற்ற உள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் கலை இலக்கிய வரலாற்றையும் நம்முடைய பண்பாட்டையும்
இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும் என
நான் நம்புகிறேன்.


திராவிட இயக்கம் என்பது பேசியும் எழுதியும் வளர்ந்த இயக்கம். பெரியார் ,அண்ணா,
கலைஞர் எழுதியது , பேசியதை தொகுத்தால் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இந்த
இடத்திற்கு வந்துள்ளோம் என்று தெரியும். கலைஞர் பற்றிய வழியில் வந்த இயக்கம்.
நாடக நடிகர் திரைக்கதை ஆசிரியர் கவிஞர் எழுத்தாளர் பத்திரிக்கையாளர் பேச்சாளர்
என்ற பன்முக திறமையில் வந்த கலைஞரின் வழியில் வந்தவர் தான் நாம் அத்தனை பேரும்.

எனது பள்ளி காலங்களில் மற்ற பாடங்களில் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்தாலும்
தமிழில் மட்டும் 80 க்கும் மேல் அதிக மதிப்பெண் பெறுவேன். அதற்குக் காரணம்
கலைஞர் அவர்கள் தான். என்னிடம் இருந்த செங்கோலை பறித்தாலும் எழுதுகோலை பறிக்க முடியாது என்று கூறியவர் கலைஞர்.


தற்போது 115 கோடி ரூபாய் மதிப்பில் மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில்
பெரும் நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் அந்த நூலகம்
பயன்பாட்டுக்கு வரவுள்ளது. எங்களது இளைஞர் அணி சார்பாக அன்பகத்திலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் நூலகம் அமைத்துள்ளோம், நடமாடும் நூலகங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழின் பெருமைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். மாணவர்கள் கல்வியோடு இதுபோன்ற இலக்கிய திறமைகளையும் வளர்த்துக்
கொள்ள வேண்டும் என்பதை ஒரு சகோதரராக கேட்டுக் கொள்வதாகவும் அனைவருக்கும்
அனைத்தும் என்பது தான் சமூக நீதியின் கொள்கை அதனை சிறப்பாக செய்ய வேண்டும்
என்பதுதான் முதல்வரின் நோக்கம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.