புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில்
செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பெருமாள்(58). இவர் அங்கு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் நேற்று முன்தினம் சைல்டு லைன் உதவி எண்ணுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தைகள் நல மையம் சார்பில் குழந்தைகள் நல அலுவலர்கள், திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்து போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நேற்று அந்த ஆசிரியரை முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் பெருமாளுக்கு ஆதரவாக அப்பள்ளியில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழிவாங்கும் நோக்கில் அந்த 7 மாணவிகள் பெருமாள் ஆசிரியர் மீது புகார் தெரிவித்ததாக போராடும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.








