திக்கு வாய் என்பதால் ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் 2வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரயிலில் அடிப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் ரயிலில் அடிப்பட்டு இறந்த சிறுவன் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இதற்கிடையே மாணவனின் வீட்டு தண்ணீர் கேன் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்தபோது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரியவந்தது.
அந்த கடிதத்தில், “எனக்கு திக்குவாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை. மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப் பிடிக்கவில்லை. அதனால், ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது, இது நானே எடுத்த முடிவு, ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள்” என உருக்கமாக எழுதியிருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







