நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில், எதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கலாம் என ப.சிதம்பரம் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் நேற்று ராகுல்காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகினார்.
இதனிடையே, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும் ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறையினர் எதன் அடிப்படையில் விசாரணையை தொடங்க முடியும் என காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், அறிவார்ந்த பாஜக நண்பர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
PMLA சட்டத்தில் உள்ள பட்டியல் குற்றங்களில் (scheduled offences) எந்தக் குற்றத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார். பட்டியல் குற்றத்தை எந்தக் காவல் துறைப் பிரிவு எந்தக் காவல் நிலையத்தில் எந்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) பதிவு செய்திருக்கிறது? என தெரிவித்துள்ளார். மேலும் அந்த முதல் தகவல் அறிக்கையை எங்களுக்குக் காட்டுவீர்களா? என்றும் சாடியுள்ளார். பட்டியல் குற்றம் இல்லாமல், முதல் தகவல் அறிக்கை இல்லாமல், அமலாக்கத் துறை PMLA சட்டத்தின் கீழ் ஒரு விசாரணையைத் தொடங்க முடயாது என்பது பாஜக-வினருக்கு தெரியுமா? என்றும் பா.சிதம்பரம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
– இரா.நம்பிராஜன்







