மே 2ம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களில் விலை ஏறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களின் 72வது வருடாந்திர மகா சபை கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பொருளாளர் தன்ராஜ், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஸ்டேக் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் லாரிகள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. வரும் 15ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணமாக மே 2ம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் எனவும் கூறினார்.







