”சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும்” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து  தற்போது அவர் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். கடந்த 15 நாட்களாக கோயம்புத்தூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “நல்லபடியாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிற இப்பொழுதுதான் தொடங்கியுள்ளோம். இதுதான் இரண்டாவது கால்ஷீட்” என்று ஜெயிலர் 2 படம் குறித்து பேசினார்.அதன் பின்பு அவரிடம்
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “தீவிரவாத செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது காஷ்மீரில் இயற்கையான அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று இது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள் கண்டிப்பாக இதை செய்தவர்களுக்கும் அதன் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும் இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு கனவில் கூட அவர்கள் நினைக்கக் கூடாது”

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.