மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை, அவ்வாறு ஈடுபடுத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கும் மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் எந்தவொரு நிறுவனமோ அல்லது தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தக்கூடாது எனவும், மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை எனவும் நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. அவ்வாறு சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை, மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, உரிமம் பெறாத லாரிகளை கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் அவ்வாறு விதிமுறைகளை மீறும் லாரிகளுக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாயும், 2வது முறை ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும், மேலும் கழிவுநீரை திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.