இந்திய வங்கிகளின் வலிமை உலகளவில் பாராட்டப்படுகிறது – பிரதமர் மோடி

பல்வேறு நாடுகளின் வங்கித்துறை சிக்கலை சந்தித்துவருகின்ற சூழலில் இந்திய வங்கிகளின் வலிமை உலகளவில் பாராட்டப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளை தொடர்ந்து 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஆஸ்திரேலியா…

பல்வேறு நாடுகளின் வங்கித்துறை சிக்கலை சந்தித்துவருகின்ற சூழலில் இந்திய வங்கிகளின் வலிமை உலகளவில் பாராட்டப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளை தொடர்ந்து 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று சிட்னியில் உள்ள ((Qudos Bank Arena என்ற அரங்கத்தில்)) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்-சும் பங்கேற்ற நிலையில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்றிருந்தனர். அப்போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், பின்னர் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக வேதமந்திரங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவு பரஸ்பர நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் கொண்டது என்று தெரிவித்தார். இருநாடுகளிடையேயான தூதரக உறவினால் மட்டுமே இது உருவாகவில்லை என்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களால் தான் உருவானது என்று குறிப்பிட்டார்.

மேலும் நமது வாழ்க்கை முறை வேறுபட்டிருந்தாலும், டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும், திரைப்படங்களும் நம்மை இணைப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரிஸ்பேன் நகரில் தூதரகம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். உலகப்பொருளாதாரத்தில் பிரகாசமான இடமாக இந்தியாவை உலக வங்கி கருதுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக உருவெடுப்பதே இந்தியாவின் நோக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.