#StopHarassment: பாப்பாநாடு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 வயது சிறுவன் உட்பட மேலும் 2 பேர் கைது!

பாப்பாநாடு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 17 வயது சிறுவன் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகம் கிராமத்தைச்…

பாப்பாநாடு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 17 வயது சிறுவன் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி இளம்பெண். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளி, தாய் கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விடுமுறைக்காக இளம்பெண் ஊருக்கு வந்தார். கடந்த 12ம் தேதி இளம்பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்த போது, தெற்குக்கோட்டையை சேர்ந்த கவிதாசன் (25) இளம்பெண் வீட்டுக்கு வந்து, அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார்.

அந்த பெண் வர மறுத்துள்ளார். இதனால், இளம்பெண்ணை வலுகட்டாயமாக, ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். அங்கு கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (26), பிரவீன் (20), 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இருந்துள்ளனர். அந்தப்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை அவர்களது செல்போனில் வீடியோவாக பதிவும் செய்துள்ளனர்.

பிறகு, 12ம் தேதி இரவு பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில், கவிதாசன் அவர்கள் நண்பர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் இளம்பெண்ணை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. தற்போது, பாதிக்கப்பட்ட பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் பாப்பாநாடு போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.