மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனமே எடுத்து நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம் எனத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், தென் தமிழகத்தில் மக்களின் தொழில் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரம் குறித்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் இந்து மக்கள் கட்சி தமிழக நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், வைகுண்ட மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ், தமிழக மீனவர் மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் கோல்டன் பரதர் மற்றும் இந்து பறையர் பேரவைத் தலைவர் ராஜசேகர் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அது விற்கப்பட்டால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும். வெளிநாட்டுச் சதி மற்றும் சிலோன் செய்த சதியால், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு இழந்து தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு தரப்பினர் பக்கத்திலிருந்து மாசுக் கட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது, எந்த அறிக்கையும் மாசுக் கட்டுப்பாடு ஏற்படுகிறது என அறிவிக்கவில்லை. வெளி நாட்டிலிருந்து தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலைக்கு வருவாய் ஈட்டும் வகையில், வெளி நாட்டிலிருந்து தாமிரம் இறக்குமதி செய்வதற்காகவே இங்கு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை இங்கு இயங்கி வந்த போது தாமிரம் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் உள்ளூர் வாசிகள் 70 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டு மிகுந்த பாதிப்பில் இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் பணி சிறக்க வேண்டும், அது திரும்பவும் துவங்கப்பட்டு பணிகள் துவங்கி அனைவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக 70 சதவிகிதம் பேர் வேலை இல்லாதவர்கள், தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என கூறினார்.
அண்மைச் செய்தி: ‘சென்னை ஈ.வே.ரா சாலையில், சோதனை ஒட்டமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது’
மேலும், நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறோம் எனக் கூறிய அவர், அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தால் அரசுக்கு எதாவது பிரச்சனை வந்து விடுமோ என நினைக்கின்றனர். மக்கள் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தில் இறங்கவில்லை, ஆனால் ஒரு சில இயக்கங்கள் இதில் சம்பந்தப்பட்டு போராட்டத்தை முன்னெடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்றனர். ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கஷ்டப் பட வேண்டி இருந்தது, 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி உள்ளது. இந்த ஆலையை மூடிவிட்டு, அதனை விற்பனை செய்துவிட்டால் உங்கள் பொருளாதார பிரச்சனை தீருமா? ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லிச் சொல்லும் அந்த விஷமி யார்? 24 ஆண்டுகள் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையைக் கடந்த 4 ஆண்டுகள் மூட காரணம் யார்? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், அங்குள்ள மக்களே ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரி திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர். எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனமே எடுத்து நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம் என அவர் பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய அர்ஜுன் சம்பத், அந்த பகுதியில் உள்ள மக்கள் அவர்களது தேவைக்காக, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் துவங்க வேண்டும் எனக் கையெழுத்து இயக்கங்கள் துவங்கியுள்ளனர். 25,000 பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மீண்டும் தாமிர ஆலையைத் துவங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். சுகாதாரத்துறை ஆதாரத்தின் படி ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய் வருவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பட்டு ஆணையத்தின் அறிக்கையின் படி அங்குள்ள தண்ணீரில் மாசு படிகிறது என எந்த அறிக்கையும் தரப்படவில்லை. கொரோனா நேரத்தில் ஆக்சிஜன் தேவையான போது, ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்து கொடுத்தனர். மீன்பிடி தடை காலத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் அந்த பகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். எனவே தமிழக அரசு தயவு செய்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அவர் கூறினார்.








