நாட்டுப்புற கலைகளை கொண்டு நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி அளித்துள்ளார்..
கடந்த திமுக ஆட்சியின் போது, நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் வரை சென்னை சங்கமம் என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சியை நடத்தி வந்தனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடைபெறாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் கிராமிய கலைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்த தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் நடன நையாண்டிமேள சங்கத்தினர், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை திரும்பவும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி, முதலமைச்சரிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள் தெரிவித்தனர்.







