எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் உள்ளதால் இந்த மிஷன் தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்வான் மைதானத்தில் இருந்து இன்று காலை எஸ்எஸ்எல்வி-டி1 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளுடன் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து முதல், 2-வது, 3-வது நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததாக முதலில் இஸ்ரோ அறிவித்தது. ஆனால் இறுதி கட்டத்தில் செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. புவி கண்காணிப்பிற்கு ஈஒஎஸ்-02 என்ற செயற்கை கோளுடன், கிராமப்புற மாணவிகள் உருவாக்கிய அசாதி சாட் செயற்கோள் எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 செயற்கைக்கோள்கள் மற்றும் அதை சுமந்து சென்ற ராக்கெட்டில் இருந்து சிக்னல் வரவில்லை. செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டை மீண்டும் தொடர்புகொள்ளும் முயற்சிகளும், சிக்னலை மீண்டும் உறுதி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் எஸ்எஸ்எல்வி-டி1 செயற்கைக்கோள்களை 356 கிமீ வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது. எனவே செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.







