முக்கியச் செய்திகள் உலகம்

மகிந்த ராஜபக்ச வெளிநாடு செல்ல தடை

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலிலும், அலரி மாளிகைக்கு முன்பும் போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு செல்ல நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியராச்சி மற்றும் காவல்துறை அதிகாரி தேசபந்து தென்னகோன் உட்பட 14 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் கட்டுக்கடங்காத வன்முறையால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, குடும்பத்துடன் தமிழர் பகுதியான திரிகோணமலையில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து, புதிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச தீவிரம் காட்டி வருகிறார்.

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அதிபர் விடுத்த அழைப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்று கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இலங்கையின் பிரதமராக ரணில் இன்று பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 4 நிபந்தனைகள் விதித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோத்தபய ராஜபக்சவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

1. குறுகிய காலத்தில் பதவி விலக அதிபர் கோத்தபய ராஜபக்ச இணக்கம் தெரிவிக்க வேண்டும்

2. இரு வாரங்களுக்குள் 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

3. நிறைவேற்று அதிபர் முறைமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்

உள்ளிட்ட 4 கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தொடங்கியது மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு

Saravana Kumar

ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

Hamsa

பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன் 

Ezhilarasan