இலங்கையில் ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவும் ஐநா

இலங்கையில் கர்ப்பிணிகளின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஐநா தொடங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு…

இலங்கையில் கர்ப்பிணிகளின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஐநா தொடங்கியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய தீர்ந்துவிட்டதால் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது.

பயிர்களுக்கு ரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் உள்நாட்டிலும் உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், உணவுப் பொருட்களின் விலை கடந்த மே மாதம் 57.4 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நாட்டில் 22 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக அவதிப்படுவது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு அவசர ரீதியில் உதவ ஐநாவின் உலக உணவு திட்டம் முன்வந்துள்ளது.

இலங்கையில் உள்ள கர்ப்பணி பெண்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.14,400 வழங்கும் திட்டத்தை ஐநாவின் உலக உணவு திட்டம் இன்று தொடங்கியது. முதற்கட்டமாக கொழும்பில் உள்ள சுமார் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு இந்த உதவித்தொகைக்கான ரசீது வழங்கப்பட்டது.

இதன்மூலம், இலங்கையில் உள்ள ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைக்க வழி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஐநா உலக உணவு திட்டம், நெருக்கடியான இந்த நேரத்தில் இலங்கைக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.