இலங்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்தம் – உண்மையான அக்கறையா? உலகநாடுகள் அழுத்தமா?

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்…. இலங்கையில் 1979ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) அப்போதைய அதிபர்…

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்….

இலங்கையில் 1979ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவால் கொண்டு வரப்பட்டது. நாட்டுப் பாதுகாப்பிற்காக என்று கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த சட்டம் இலங்கையின் கொடுமையான சட்டமாக மனித உரிமை ஆர்வலர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் இருந்த தடா, பொடா சட்டங்களை விட கடுமையானது. கொடுமையானது என்கிறார்கள்.  காரணம், போராட்டக் குழுக்களை ஒடுக்கும் வகையில் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராகவே இந்த சட்டம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி என்ன கொடுமையான சட்டம் என்று கேட்கலாம், இந்த சட்டத்தின் மூலம்,
ஏன்? எதற்கு? என்கிற எந்த விபரத்தையும் சொல்லாமல் ஒருவரை கைது செய்யலாம். கைது செய்யப்பட்டால், பிணை, சட்ட உதவி, உறவினர் சந்திப்பு உள்ளிட்ட எந்த உரிமையும் உதவியும் கிடைக்காது. எங்கு இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, உயிரோடுதான் இருக்கிறார்களா? என்பதும் தெரியாது. அப்படி கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள், மாயமாகியுள்ளனர். சிறையிலேயே வாழ்க்கையை கழித்துள்ளனர்.

ஆரம்பத்தில் தமிழர்கள், போராளிக் குழுக்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது அனைத்து தரப்பினர் மீதும் குறிப்பாக சிங்களவர்கள் மீது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுக்கு எதிரான போராட்டம் நடத்திய மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மூவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டனர். “போராட்டகாரர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது மிகுந்த கவலைக்குரியது” என்கிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா.

மனித உரிமைகளுக்கு எதிரான இந்த சட்டத்தை நீக்க 40 ஆண்டுகளாக இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு உள்ளிட்ட நாடுகள் இந்த சட்டத்திற்கு எதிராக அண்மையில் குரல் கொடுத்துள்ளன. இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீக்கி, தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) என்று இயற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

“கடந்த 1979ம் ஆண்டு முதல் உள்ள இந்த சட்டத்தின் சில அம்சங்களை நீக்க சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இதன்படி, கைது செய்யப்படுவோருக்கு பிணை, வழக்குரைஞர், உறவினர் சந்திப்பு உள்ளிட்ட உதவிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கொடூர சட்டத்தை திருத்தி புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்தாலும் இன்னும் பலருக்கு அச்சம் தீரவில்லை.

“தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, சர்வதேச நிர்பந்தங்களுக்காகவே இந்த திருத்தம் செய்யப்படுகிறது. ஆனாலும் ஆட்சியாளர்களை நம்ப முடியாது. திருத்தத்தை பெயரளவில் மட்டும் செய்துவிட்டு, கடுமையை தொடர வாய்ப்புள்ளது.” என்கிறார்கள்.

இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் நியூஸ் 7 தமிழிடம் கூறுகையில்,
“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, சர்வதேச நிர்பந்தங்களுக்காகவே பயங்கரவாத தடைச் சட்டம் புதிய பெயரில் திருத்தம் செய்யப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள கடுமையான விதிமுறைகளை நீக்கம் செய்யாமல் திருத்தச் சட்டம் என்ற பெயரில் சில திருத்தங்களை செய்து சர்வதேசத்தை ஏமாற்றவே ராஜபக்சேக்களின் வழிகாட்டலுடன் இலங்கையை ஆட்சி செய்யும் புதிய அதிபர் ரணில் விக்ரம் சிங்கேவின் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் என்ற நாடகமாகும். ஜெயவர்த்தனே முதல் ராஜபக்சே சகோதரர்கள் வரை இலங்கைத் தீவை ஆண்ட அனைத்து அதிபர்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தமிழ் மக்களை இன அழிப்புக்கு உள்ளாக்குவதற்காகவே பயன்படுத்தினார்கள் என்பதே வரலாறு.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் துணையுடன் தான் பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கைது செய்து காணாமலடித்துள்ளனர். படுகொலை செய்துள்ளனர். சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்துள்ளனர் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய ஜனநாயகப் புரட்சியின்போது சிங்கள இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். இன்று அவர்களையும் இந்த கொடிய சட்டத்தை பயன்படுத்தியே அரசு கைது செய்தும் படுகொலை செய்தும் வருகிறது.” என்கிறார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “அனைத்துலக அழுத்தங்களை சமாளிப்பதற்காகவும் குறிப்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் ஐ.நாவில் மனித உரிமை ஆணையத்தில் இடம்பெறவுள்ள 51 வது கூட்டத்தில் இலங்கை மீதான அழுத்தங்களை சமாளிப்பதற்காகவுமே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, வேறொரு பெயரில் புதிய சட்டத்தை அரங்கேற்றும் ரணிலின் தந்திரம் தான்” என்கிறார் சண் மாஸ்டர்.

காலம் தந்த பாடத்தால், மனமாற்றம் ஏற்பட்டு, உண்மையான அக்கறையோடு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தால் மகிழ்ச்சியே என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

– ஜோ மகேஸ்வரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.