600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஸ்பாட்டிபை நிறுவனம்

சர்வதேச மியூசிக் ஸ்ட்ரீமிங்க் நிறுவனமான ஸ்பாட்டிபை (Spotify) நிறுவனம் 600 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால்…

சர்வதேச மியூசிக் ஸ்ட்ரீமிங்க் நிறுவனமான ஸ்பாட்டிபை (Spotify) நிறுவனம் 600 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை சமீபத்தில் அறிவித்தது. அமேசான் நிறுவனம் 18,000  ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் 5% சதவீத ஊழியர்களை அதாவது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. தற்போது ஸ்பாட்டிபை நிறுவனம் பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

நிர்வாக மறுசீரமைப்பு காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படுவதாக ஸ்பாட்டிபை நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தம் 9800 பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் தற்போது பணிபுரிகின்றனர். இவர்களில் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருக்கின்றனர்.

பணிநீக்கம் குறித்து ஸ்பாட்டிபை நிறுவனத்தின் சிஇஒ டேனியல் எக் ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,”செலவினங்களை முறைப்படுத்த பணி நீக்க நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது. இந்த முடிவு மிக கடினமானது. ஆனாலும் தவிர்க்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.