ஜமைக்காவில் உள்ள பார் ஒன்றில் சவாலுக்காக 21 மது பானங்கள் கலந்த காக்டெய்லை குடித்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர், திடீரென இறந்துப் போன சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரை சேர்ந்தவர் திமோதி சதர்ன், 53 வயதான இவர் கடந்த மாதம் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் ஜமைக்கா சென்ற அவர், தனது குழந்தைகள், சகோதரி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் விடுமுறை கொண்டாடி வந்தபோது செயின்ட் ஆன்ஸில் உள்ள ராயல் டெகாமரோன் கிளப் கரீபியனுக்கு இரண்டு கனடிய
பெண்களுடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு நடைபெற்று கொண்டிருந்த போட்டி நிகழ்வில் பங்குகொண்ட அவர்,
ஒரே நேரத்தில் 21 மது பானங்கள் கலந்த காக்டெய்லை குடிக்க முயன்றுள்ளார். ஆனால் வெறும் 12 விதமான கலவைகளை குடித்த உடனேயே போதை ஏறியதால் தடுமாறிய அவர் பாதியுடனேயே குடிப்பதை நிறுத்திவிட்டு தான் தங்கி இருந்த அறைக்கு திரும்பினார்.
இந்நிலையில், அன்று காலை துவங்கிய பிராந்தி மற்றும் பீர் அவர் தொடர்ந்து குடித்த படியே இருந்ததால், சவாலில் பங்கேற்ற போது உட்கொண்ட மது பானங்களும் அவருக்கு உடல் உபாதையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஒரே வாந்தியும், மயக்கமுமாக அறையில் கிடந்துள்ளார்.
அப்போது அவரை கண்ட குடும்ப உறுப்பினர்கள் உடனே அம்புலன்சுக்கு அழைத்த போது, அங்கு வந்த செவிலியர் ஒருவர் திமோதி சதர்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறப்பிற்கு பின் அவரது குடும்ப உறுப்பினர்கள், அம்புலன்ஸில் வந்த செவிலியர் முறையான பயிற்சி பெறாத நபராக இருந்ததால் தான் திமோதி சதர்ன் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டிய நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்களோ அளவுக்கு அதிகமாக குடித்ததனால் ஏற்பட்ட இரைப்பை குடல் அழற்சியின் காரணமாகத்தான் அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









