சென்னையில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒவ்வொரு மாடியாக வடமாநில நபர் ஒருவர் தாவிக்கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஜாம்பஜார் பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் மூன்றாவது மாடிக்கு ஏறிய வடமாநில நபர் ஒருவர், அங்கிருந்து ஒவ்வொரு மாடியாக தாவிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை திருடன் என்று நினைத்தனர்.
எனவே அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாடிக்கு மாடி தாவிக் கொண்டிருந்த அந்த வடமாநில நபரை மீட்டனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர் மதுபோதையில் இருக்கிறாரா என்று விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய பெயர் அமிஸ்வர் என்பதும் தெரியவந்தது. மேலும் 39 வயதாகும் அமிஸ்வருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அமிஸ்வர் லோடுமேனாக பணியாற்றி வருவதாகவும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.







