ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதன் கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்துவதாக அதன் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, ஜெட் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விமான கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்துவதாக முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இயக்குநர் அஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜூன் 2021 முதல் விமான எரிபொருள் விலை 120 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க மத்திய அரசை இந்நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், எரிபொருள் விலை உயர்வு, விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இத்தனை நாட்கள் இவற்றை தாங்கிக் கொண்டோம். அதேநேரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விமான கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். எனவே விமான கட்டணத்தை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார்.








