ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்த 6 வயது சிறுமியின் பேச்சு உலக கவனத்தை ஈர்த்ததோடு, அவர் உலக கண்காட்சி பேச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த இந்திய -அமெரிக்க சிறுமி கியாரா கவுருக்கு 6 வயது தான் ஆகிறது. இவர் தற்போது பெற்றோருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி லண்டனில் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் 36 புத்தகங்களை இடைவிடாமல் படித்து முடித்ததே அந்த பெரும் சாதனையாகும். இவரது சாதனையை பாராட்டி லண்டன் உலக சாதனை புத்தகத்திலும், ஆசியா சாதனை புத்தகத்திலும் கியாரா கவுர் இடம் பிடித்துள்ளார். மேலும் ‘குழந்தை மேதை’ என லண்டன் உலக சாதனை புத்தகம் சிறுமியை பாராட்டி உள்ளது.
இந்நிலையில், அண்மையில் துபாயில் நடைபெற்ற வேர்ல்ட் எக்ஸ்போ நிகழ்ச்சியில் சிறுமி கியாரா கவுர் பேசிய பேச்சுகள் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. சிறிய மாற்றங்கள் பெரிய வித்தியாசம் என்று சிறுமியின் பேச்சை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். மெக்சிகோ பெவிலியனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் வார கொண்டாட்டத்தின் போது சிறுமி ஆற்றிய உரை, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனத்தை கொண்டு சென்றது. சிறுமியின் பேச்சு உலக அளவில் சென்றடைந்ததையடுத்து, ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சிறுமியை நேர்காணல் செய்துள்ளது. அதில் சிறுமி அளித்த பேட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி அளித்த பேட்டியில், எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது அற்புதமான நிகழ்வு என்றும், பார்வையாளர்களிடம் பேசுவது ஒரு அற்புதமான அனுபவத்தை தருவதாகவும் சிறுமி கியாரா கவுர் தெரிவித்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய எனது பாட்டி கமாண்டர் டாக்டர் ரீட்டா பத்ராவிடம் பேசி தனது உரையை தயார் செய்ததாகவும், கல்வி, உரிமைகள், சுகாதாரம் ஆகியவற்றில் இளம் பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதில்தான் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதன் உண்மையான சாராம்சம் உள்ளது என்றும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது முதல் புத்தகமான “டெய்ரி ஆஃப் எ 5-ஆல்ட் ஜீனியஸ் சாட்டர்பாக்ஸ் ஹூ செட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” என்ற புத்தகத்திலும் அவர் பல்வேறு சம உரிமைக்கான வார்த்தைகளை சேர்த்துள்ளார். புத்தகங்கள் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும், நீங்கள் விரும்பும் இடத்துக்கு புத்தகங்களை கொண்டு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். புத்தகங்களை எங்கும், எப்போதும் படிக்காலாம் என்றும் 6 வயதான சிறுமி கியாரா கவுர் தெரிவித்துள்ளார்.
Advertisement: