சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டியில், ஆண்களுக்கான பளுதூக்குதல் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த 16 வயதான விஷால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சிறப்பு ஒலிம்பிக் என்பது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 190 நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்த 198 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான பளுதூக்குதல் பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த 16 வயதான விஷால் என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்பு பெண்களுக்கான 800 மீட்டர் தடகளப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த கீதாஞ்சலி தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







