இன்னும் 6 மாதங்களில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையமாக விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காணாமல் போன தனது மகளை ஆஜர்படுத்தக் கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த
ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பிலிருந்து தெரிவித்ததாவது:
மதுரை மற்றும் கோவை நகரிலும், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, ஈரோடு மற்றும்
திண்டுக்கல் ஆகிய இடங்களில் இன்னும் 6 மாதங்களில் குழந்தை கடத்தல் தடுப்புப்
பிரிவு காவல் நிலையமாக விரிவுபடுத்தப்படும்.
இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் 2022 வரை மதுரை
மற்றும் கோவையில் 26 சிறுவர்கள், 39 சிறுமிகளைக் கண்டறிய வேண்டியுள்ளது. மற்ற 5
மாவட்டங்களில் 53 சிறுவர்களையும், 166 சிறுமிகளையும் கண்டறிய வேண்டியுள்ளது என
தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரத்துடன் இந்த 7 இடங்களில் காவல் நிலையமாக விரிவுபடுத்தும் அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். இவற்றை 3 மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும்.
கடந்த 6 மாதங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு
விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.