கோவில் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள்
வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “எங்கள் கிராமத்தில் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது இந்தக் கோவில் இந்து அரநிலையத் துறையின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கோவிலில் தனிநபர் யாருக்கும் எந்த முதல் மரியாதையும் கிடையாது.
அனைவருக்கும் பொதுவான கோவிலாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு சொந்தமான கோவில் என்றும்
சிலருக்கு மட்டுமே முதல் மரியாதை என பிரச்சனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற பங்குனி உற்சவ விழாவில் ஆடல், பாடல்
நிகழ்ச்சி நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர் நீதிமன்றத்தில் பல்வேறு
நிபந்தனைகள் விதித்து குறிப்பாக ஆபாச நடனங்கள் இருக்கக் கூடாது என நிபந்தனைகள்
விதித்து அனுமதி கொடுத்திருந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 01.04.23 அன்று நடைபெற்ற ஆடல், பாடலில்
மிகவும் ஆபாசமாகவும் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி நிகழ்ச்சி
நடத்தப்பட்டது. எனவே, இந்த விழா ஏற்பாட்டாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். மேலும் கோவில் திருவிழா அன்று ஆபாச நடனம் ஆடியதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நீதிபதி முன் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி P.T.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இதனைப் பார்த்த நீதிபதி,
கோவில் திருவிழாவில் இவ்வளவு மோசமாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த
அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பினார். கோவில் என்பது இறை வணக்க வழிபாட்டுக்கு பொதுமக்கள் வரக்கூடிய இடத்தில் இவ்வளவு ஆபாசமான நடனங்களை ஆடும் போது காவல்துறை என்ன செய்தது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு இந்த நடனங்கள் உள்ளது. ஆனால், சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதை ஏற்க முடியாது எனவே விழா ஏற்பாடுகள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளனர்.







