குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17V5 ரக ஹெலிகாப்டர் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த நபர் கூறியுள்ளார். இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஹெலிகாப்டரில் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் வரை பயணித்துள்ளதாக விபத்து பகுதியை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது.
விபத்துக்குள்ளான MI-17V5 ரக ஹெலிகாப்டர் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படக்கூடியது. மேலும் இது ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்டது. Medium transport எனும் வகையை சார்ந்த இந்த ஹெலிகாப்டர் குறுகிய தொலைவில் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 36 நபர்கள் வரை இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கலாம். 4 டன் எடை வரையிலான சரக்குகளை இந்த ஹெலிகாப்டர் ஏற்றிச் செல்ல இயலும். மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த MI-17V5 ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பழைய தொழில்நுட்பங்களை கொண்டிருந்தாலும், தற்போது வரை வீரியமாக இயங்கும் திறன் கொண்டுள்ளதாக விமானப்படை இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. கடந்த 2008ல் இந்திய அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து MI-17V5 ரகத்தில் 80 ஹெலிகாப்டர்களை வாங்க 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் ஒப்பந்தமிட்டது. இதில் முதல் தவணையாக 2013லும், இரண்டாவது தவணையாக சில ஹெலிகாப்டர்கள் 2018லும் இந்தியாவுக்கு வந்தன.
ஏற்கெனவே கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்த வகை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. மட்டுமல்லாது கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்ற விமானப்படை ஒத்திகையில் இந்த ஹெலிகாப்டர் தனது திறனை வெளிப்படுத்தியது. மேலும், சாதாரண போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலைகளிலும் இந்த வகை ஹெலிகாப்டரை தரையிறக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகள் வாங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளாகியிருப்பது பெரிதும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.