திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 3 ஆம் நாளான இன்று அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வண்ண வண்ண மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தீபாராதனைக்கு பிறகு, பஞ்சமூர்த்திகள் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனிடையே, கார்த்திகை தீப திருவிழாவையொட்டி டிசம்பர் 6 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 5 மற்றும் 6ம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.








